சிறிலங்கா அரசியல் மாற்றம் – அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு

சிறிலங்காவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அமைதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும், தீர்த்து வைக்கப்பட்டிருப்பதை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் வரவேற்றுள்ளன.

சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் இன்று வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவு ஒன்றில்,

“சிறிலங்காவின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டப, இந்த வார அரசியல் முன்னேற்றங்களை அமெரிக்கா வரவேற்கிறது. சிறிலங்கா, இந்தோ-பசுபிக்கின் பெறுமதியான பங்காளராக இருக்கிறது.

சிறிலங்கா அரசாங்கம் மற்றும் மக்களுடனான எமது உறவுகளை தொடர்ந்து முன்நோக்கி நகர்த்திச் செல்வதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

சிறிலங்காவின் உறுதியான நண்பர்கள் என்ற வகையில், அமைதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் அரசியலமைப்புக்கு அமைவாக, இந்த அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.

சிறிலங்காவின் ஜனநாயக அமைப்புகளின் ஆற்றலை நாங்கள் பாராட்டுகிறோம். தேசிய நல்லிணக்கம், அனைவருக்குமான செழிப்பு, ஆகியவற்றை நோக்கி நகர்வுகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்.” என்று கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!