அதிபர் பதவியில் இருந்து மைத்திரி விலக வேண்டும் – குமார வெல்கம

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“சிறிலங்கா அதிபர் சிறிசேன அரசியலமைப்பை மீறியுள்ளார் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அரசியலமைப்பை மீறிய ஒருவர், அந்தப் பதவியில் இருக்கக்கூடாது.

எந்த நேரத்திலும் அவருக்கு எதிராக குற்றவியல் பிரேரணையை கொண்டு வர முடியும்.

அதைவிட, அரசியலமைப்பை மீறிய ஒருவர் அந்த பதவியை தொடர்ந்து வைத்திருப்பது, தொடர்ந்து பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் அவர் அறிவார்.

அதிபராக பதவி வகிப்பதற்கு தகைமையற்ற ஒருவர் நாட்டை நிர்வகிக்கும் போது, ஏனைய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், தமது பணிகளை ஆற்றுவது சிரமமாக இருக்கும்.

எனவே, அரசியலமைப்பை தனது வழியில் செயற்பட அனுமதித்து, சிறிசேன பதவியில் இருந்து விலகுவதற்கு இதுவே சரியான தருணம்.

அவர் பதவியில் நீடிப்பதால் பிரச்சினைகள் மோசமாகும். இந்த விவகாரம், அனைத்துலக அளவில் நாட்டின் தேசிய நலன்களையும் பாதிக்கும்.

அனுபவமுள்ள அரசியல்வாதி என்ற வகையில், இந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கான அதிபர் ஒருவர் மதிப்புக்குரியவராக இருக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!