அரசியல் குழப்பத்துக்குத் தீர்வு – சீனா வரவேற்பு

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு எட்டப்பட்டிருப்பதை, சீனாவும் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“நெருக்கமான பாரம்பரிய அண்டை நாடு என்ற வகையிலும், மிக முக்கியமான அபிவிருத்திப் பங்காளர் என்ற வகையிலும், சிறிலங்காவில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளுக்கு, அனைத்து தரப்புகளாலும் அமைதியான முறையில் பொருத்தமான தீர்வு காணப்பட்டுள்ளதை சீனா வரவேற்கிறது.

தமது உள்நாட்டு விவகாரங்களையும், நாட்டின் உறுதிப்பாட்டையும், அபிவிருத்தியையும் முகாமைத்துவம் செய்வதற்கான ஆற்றலும், தொலைநோக்கும், சிறிலங்கா அரசாங்கம், அரசியல் கட்சிகள், மற்றும் மக்களுக்கு இருப்பதாக சீனா நம்புகிறது.

சிறிலங்கா அரசாங்கம், மற்றும் எல்லா அரசியல் கட்சிகளுடன், நட்புரீதியான பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்துவதிலும், இரு நாட்டு மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும்,சீனா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!