கட்சி தாவிய எம்.பிக்களுக்கு அமைச்சர் பதவி இல்லை – மைத்திரி எச்சரிக்கை

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, எந்தவொரு அமைச்சுப் பதவியையும் கொடுக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி நேற்றுமுன்தினம் தீர்மானித்திருந்தது.

இந்தநிலையில், நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த லக்ஸ்மன் செனிவிரத்ன, விஜித் விஜிதமுனி சொய்சா, இந்திக பண்டாரநாயக்க ஆகியோர், அரசதரப்புடன் இணைந்து கொண்டனர்.

இதையடுத்து, அவசரமாக நேற்று மாலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை, அதிபர் மைத்திரிபால சிறிசேன கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்திலேயே அவர், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் வெளியிட்ட சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, “சிறிலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கும் முடிவை மீறிச் செயற்படும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும், அதிபர் சிறிசேன அமைச்சுப் பதவிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கமாட்டார். கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்” என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!