வட- கிழக்கை இணைக்க விடமாட்டோம்!

வடக்கு- கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் பிரேரணையை வழிமொழிந்து நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை நீக்கியமையால் தான், இன்று நாடாளுமன்றத்தில் செயலாற்றக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. மேலும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, நிறைவேற்று அதிகாரம் தான்தோன்றிதனமாக செயற்பட முடியாது என்பதை நிரூபித்து காட்டியுள்ளது.இந்நிலையில் நிறைவேற்று அதிகாரம் இல்லாவிடின் நாட்டில் பிளவுகள் தோன்றுமென பெரும்பாலான அரசியல் கட்சி உறுப்பினர்கள் கூறினர். ஆனால் தற்போது நிறைவேற்று அதிகாரத்தினால்தான் அவை அனைத்தும் ஏற்பட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் சிறுபான்மையினரை பாதுகாக்குமென மக்கள் எண்ணினர். ஆனால் அதன் உண்மை நிலையினை தற்போது நன்கு உணர்ந்திருப்பார்கள்.

13ஆவது திருத்தத்தில் வடக்கு- கிழக்கு இணைக்கப்பட்டது. ஆனால் அவை பலவந்தமாக இணைக்கப்பட்டதாக கூறி, உயர் நீதிமன்றத்தின் ஊடாக அதனை பிரித்தோம். இதனால் மீண்டும் வடக்கு- கிழக்கை இணைக்கும் செயற்பாட்டுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதுடன் நாட்டை பிளவுபடுத்தவும் அனுமதிக்கமாட்டோம்” என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!