சிறிலங்கா விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயற்பட்ட அமெரிக்கா- இந்தியா

சிறிலங்கா, மாலைதீவு ஆகிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் போது, அமெரிக்காவும் இந்தியாவும் மிகநெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்பட்டதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, பதில் பிரதி உதவிச் செயலர் டேவிட் ரான்ஸ் தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகளான சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகியவற்றின் நெருக்கடிகள் தொடர்பாக, ஏஎன்ஐ செய்திச் சேவையினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் நிகர பாதுகாப்பு வழங்குனராக இந்தியாவின் தோற்றத்தை ஆதரித்து வருகிறது.

அமெரிக்கா. இந்தியாவுடனான ஒருங்கிணைப்பு விரிவானது. அது வளர்ந்து வருகிறது.

சிறப்பாக, சிறிலங்கா மற்றும் மாலைதீவு விவகாரங்களில், நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் மிகநெருக்கமாக ஒருங்கிணைந்திருக்கிறோம்.

வொசிங்டனிலும், புதுடெல்லியிலும் உள்ள இந்திய அதிகாரிகளுடன் நான் தனிப்பட்ட முறையில் நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கிறேன்.

எனவே நாங்கள், இந்த விவகாரங்களை எப்படி கூட்டாக அணுகுவது என்பதை உறுதி செய்வதில் மிகவும் கவனமாக, இருந்தோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!