முடிந்தால் தேர்தலை நடத்துங்கள் – சவால் விடுகிறார் றோஹித!

முடிந்தால் பொதுத்தேர்தலை நடத்திக் காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், இந்த அரசாங்கத்தினால் தொடர்ந்தும் பயணிக்க முடியாமல் போகும் என்றும் குறிப்பிட்டார்.

“ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த அரசாங்கம், கடந்த காலங்களில் தவறான பாதையில் பயணித்ததை எதிர்க்கட்சிகள் அன்றி, அந்த அரசாங்கத்தில் உள்ளவர்களே கூறிவருகிறார்கள்.கடந்த காலங்களில் இந்த அரசாங்கம் பிழையான பாதையில் செயற்பட்டமையால் தான், நாம் ஆட்சியைப் பெறுப்பேற்றோம். இனிமேல் எவ்வாறு செயற்படப்போகிறது என்பதை நாம் மிகுந்த அவதானத்துடன் பார்த்து வருகிறோம்.

கட்சித் தலைமைத்துவத்தையே விட்டுக்கொடுக்காத ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயகத்தை எவ்வாறு நிலைநாட்டப் போகிறார் என்பதுதான் அனைவரதும் கேள்வியாகும். இந்தநிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் அமைச்சுப் பதவிகளுக்காக அரசாங்கத்தில் இணைந்து கொண்டார்கள். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சி தாவிக் கொண்டிருக்கும் சிலருக்கு தக்க பாடத்தைப் புகட்டியுள்ளார்.

நாட்டுக்காகத் தான் கட்சித் தாவியதாக கூறிகிறார்கள். அனைத்தும் பொய்யாகும். இவர்கள் அனைவரும் மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றுக்கு வந்தவர்களாவார். இன்னும் சிலர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகியவர்கள். இதற்கான புன்னியம் அனைத்தும் மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தான் சாரும்.

51 உறுப்பினர்களுடன் ஆரம்பித்த எமது பயணம், இன்று ஸ்திரமான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. எனவே, முடிந்தால் பொதுத் தேர்தலுக்குச் செல்லுமாறு நாம் இந்தத் தரப்பினருக்கு சவால் விடுக்கிறோம். இதற்கான யோசனையொன்றை அரசாங்கம் முன்வைத்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொடுக்க நாம் தயாராகவே இருக்கிறோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!