மைத்திரி கட்சி தலைமையை மூடுவதற்கு இது தான் காரணம்!…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை மூடுமாறு அந்த கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் உத்தரவிட்டிருந்தார். தனிப்பட்ட விஜயமாக வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பும் வரையில் கட்சி தலைமையகத்தை மூடுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற கட்சி கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், ஜனாதிபதி இந்த முடிவை எடுக்க பல்வேறு காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சி கூட்டத்தில், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவியை இல்லாமல் செய்யும் அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார். மாவட்ட அமைப்பாளர்களுக்குப் பதிலாக, மாவட்ட முகாமையாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன் போது கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக்கு மாவட்ட அமைப்பாளர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணி அமைப்பதற்கும், சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாகவே சுதந்திரக் கட்சி தலைமையகத்தை மூடும் உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார் என்று கருதப்படுகிறது. எனினும், அண்மையில் நடந்த கட்சி கூட்டத்துக்கும், கட்சித் தலைமையகத்தை மூடும் முடிவுக்கும் தொடர்பில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. கட்சி தலைமையகத்தில் பணியாற்றுவோருக்கு விடுமுறை அளிப்பதாகவே ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!