சம்பந்தனை ஏற்க முடியும்! மகிந்த ராஜபக்சவை ஏற்க முடியாது! – இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனைத் தவிர எதிர் வரிசையில் அமரும் எவரையும் எதிர்க் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது என தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களை பாராட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை அரசகரும மொழிகள் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அமைச்சர் மனோ கணேசன்,

போர்த்துக்கேயர் ஆட்சி புரிந்தப்போது யாழ்ப்பாண இராச்சியம் , கண்டி இராச்சியம், கோட்டை , சித்தாவக்கை என நாட்டில் பல்வேறு இராச்சிய பிரிவுகள் காணப்பட்டன. வேறுப்பட்ட இராச்சியத்தை வெள்ளையர்களே ஒன்றுப்படுத்தினர். அந்த ஒருமித்த நிலை தொடர்ந்து நாட்டில் நிலவ வேண்டும். எனவே மொழிகளுக்கான முக்கியத்துவத்தை புரிந்து அவற்றுக்கு மக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கம் நிலையற்றது என்பதால் கிடைக்கபெறும் குறுகிய காலத்தில் தேசிய மொழிகளுக்கிடையில் ஒருங்கிணைவை ஏறபடுத்துவதற்கான அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்படும்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய எதிர்கட்சி தலைவராகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே இருக்கிறார். எதிர்தரப்பில் அமர்பவர்கள் அனைவரையும் எதிர்கட்சிதலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அவசியமும் இல்லை. பொதுத் தேர்தலை நடத்த போவதும் இல்லை. ஆனால் விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!