சந்திரிகாவுக்கு ஜனாதிபதி தடைவிதிக்கவில்லை : விரும்பினால் செயற்குழுவில் கலந்துகொள்ளலாம் – லக்ஷ்மன் பியதாச

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு கட்சி காரியாலயத்திற்கு வருவதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை விதிக்கவில்லை. கட்சியின் மூத்த உறுப்பினர் மற்றும் ஆலோசகர் என்ற ரீதியில் அவர் எந்த சந்தர்ப்பத்திலும் கட்சி நடவடிக்கைகளில் கலந்துகொள்ள முடியும் என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

சந்திரிகா குமாரதுங்க மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சுதந்திரக்கட்சி காரியாலயத்திற்கு வருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற கருத்து தொடர்பாக வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் வினவியதற்கு பதிளலித்த அவர்,

நாளை மறுதியம் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதியினுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளது.

இதற்கு கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சந்திரிகா குமாரதுங்கவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் அவர் விரும்பினால் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளலாம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தில் இவ்வருடத்தில் சுதந்திரக் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் அவற்றுக்கு தயாராவதற்கான முன்னாயத்தங்கள் குறித்தும் விஷேட கவனம் செலுத்தப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!