மர்மநபரை தேடி சிறிலங்கா படையினர் பாரிய தேடுதல்

ஆயுதங்கள் அடங்கிய பொதியொன்றை வீசி விட்டுத் தப்பிச் சென்றார் எனக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை தேடி சிறிலங்கா இராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்று பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா- புதூர் நாகதம்பிரான் ஆலய வீதியில் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், நேற்றுமுன்தினம் இரவு சிறிலங்கா காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரைக் கண்டதும், தன்னிடம் இருந்த பொதியை தூக்கி எறிந்து விட்டு தப்பிச் சென்றார் என கூறப்படுகிறது.

தப்பிச் சென்றவரை காவல்துறையினர் துரத்திச் சென்ற போதும் பிடிக்க முடியவில்லை.

அவரால், கைவிடப்பட்ட பொதியைச் சோதனையிட்ட போது, அதற்குள், கைத்துப்பாக்கி ஒன்றும், அதற்குரிய ரவைகளும், நான்கு கைக்குண்டுகளும், இரண்டு ஸ்மார்ட் அலைபேசிகளும், அதற்குரிய 2 மின்கலங்கள் மற்றும் மின்னேற்றி உள்ளிட்ட பொருட்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து புளியங்குளம் காவல் நிலையத்தில் இருந்து மேலதிக காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். சிறிலங்கா இராணுவத்தின் உதவியும் கோரப்பட்டது.

நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில், விரைந்து சென்ற காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து அந்தப் பிரதேசத்தை தமது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டு இரவிரவாக காட்டுப் பகுதியெங்கும் தேடுதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தேடுதல்கள் நேற்றுக்காலை மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டது.

எனினும், தப்பிச் சென்றதாக கூறப்படும் நபரைக் கைது செய்யாத நிலையில், நேற்று மதியத்துடன் இந்த தேடுதல் நடவடிக்கை கைவிடப்பட்டது.

அதேவேளை, கைப்பற்றப்பட்ட ஸ்மாட் அலைபேசியின் விபரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளில், அதற்குரிய சிம் அட்டை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே, தப்பிச் சென்றதாக கூறப்படும் சந்தேகநபர், 35 தொடக்கம், 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கக்கூடும் என்றும், அவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் முன்னாள் உறுப்பினராக இருக்கலாம் என்றும் சிறிலங்கா காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தக் கூடிய வகையில், அவர் கைத்துப்பாக்கியை தயார் நிலையில் வைத்திருந்தார் என்றும், காவல்துறையினர் அல்லது இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் அவருக்கு இருந்திருக்கலாம் என்றும், சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தப்பிச் சென்றதாக கூறி நேற்று நடத்தப்பட்ட தேடுதல்களினால், புளியங்குளம், கனகராயன்குளம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான நிலை காணப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!