நாமல் குமாரவுக்கு வாய்ப்பூட்டு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு எந்த கருத்தையும் வெளியிடக் கூடாது என்று நாமல் குமாரவுக்கு நீதிவான் தடை விதித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்புச் செயலணியின் பணிப்பாளர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் நாமல் குமார, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என்று இந்தியர் ஒருவரும், பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளையும் முன்னெடுத்து வருகிறது.

எனினும், படுகொலைச் சதித் திட்டம் தொடர்பான இன்னும் பல இரகசியங்களை வெளியிடப் போவதாக நாமல் குமார அடிக்கடி ஊடக சந்திப்புகளை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு கோட்டே நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, நாமல் குமார ஊடகங்களுக்கு வெளியிடும் தகவல்களால் தமது விசாரணைகளுக்கு .இடையூறு ஏற்படுவதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து, நாமல் குமாரவை ஊடகங்களுக்கு எந்தக் கருத்தையும் வெளியிடத் தடை விதித்த நீதிவான் ரங்க திசநாயக்க, நாமல் குமார வழங்கிய தகவல்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறும், ஊடக நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டார்.

இந்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை வரும் 16ஆம் நாள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிவான் பணித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!