கால அவகாசம் மார்ச்சுடன் நிறைவு : பதிலளிக்கும் கடப்பாட்டில் இலங்கை

பொறுப்புக் கூறல் மற்றும் மீள் நிகலாமையை உறுதிப்படுத்தும் வகையிலும் ஏற்கெனவே உறுதிமொழி வழங்கியமைக்கு அமைவான மனித உரிமைகள் உள்ளிட்ட விடயங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் முக்கியமான தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இதன் போது உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பில் உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்கப்படும். இதனடிப்படையில் இலங்கையின் உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இவற்றை விசாரிக்க வேண்டும் என்ற அழுத்தம் சர்வதேச சமூகத்தினால் பிரயோகிக்கப்பட்ட நிலையில் இலங்கை அதற்கான ஒப்புதலை வழங்கியது. இதன் போது உள்ளக விசாரணையை இலங்கை கோரிய போதும் சர்வதேச விசாரணையே முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலும் காணப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு அந்தஸ்துடைய மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை கோரும் நிலை காணப்படுகின்றது. குறிப்பாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஜஸ்மின் சூகா உள்ளிட்டவர்கள் இலங்கைக்கு இம்முறை கடும் சவால்களை ஏற்படுத்துவார்கள்.

வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினரே ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்பில் கலந்துக்கொள்ளவுள்ளனர். இரண்டு வருடகால அவசகாசம் குறித்து பல்வேறு கேள்விகளுக்கும் இலங்கை பதிலளிக்க வேண்டும் என்பதுடன் சவேந்திர சில்வாவின் நியமனம் இலங்கைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!