அரசுக்கு கூட்டமைப்பு நிபந்தனை விதிக்க வேண்டும்!

வரவுசெலவு திட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு நிபந்தனை விதிக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எப் கட்சியின் கிளிநொச்சி கிளையினரின் நிர்வாக தெரிவு நேற்று இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“வரவிருக்கின்ற வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில நிபந்தனைகளை விதித்து அவற்றினை நிறைவேற்றுவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதன் பின்னரே அரசாங்கத்திற்கான ஆதரவு தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். முக்கியமாக அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் பிரச்சினை மற்றும் காணிப்பிரச்சனைகள் போன்ற விடயங்களுக்கு அரசாங்கத்திற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

இந்தமுறையும் கூட்டமைப்பு பேரம் பேசும் சக்தியைத் தவற விடுவார்களாயின் எக்காலத்திலும் தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் எதையுமே அடைய முடியாது. இதனால் எதிர்காலத்தில் தமிழர்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதே உண்மையான நிலைப்பாடாகும்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!