ஜனாதிபதி வேட்பாளராக சங்ககார களமிறங்கமாட்டார்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார, ஜனாதிபதித் தேர்தலில், வேட்பாளராகக் களமிறங்க இணக்கம் தெரிவிக்கமாட்டார் என்றும், இது தொடர்பான எந்தவிதமான கலந்துரையாடல்களிலும் அவருடன் தான் ஈடுபடவில்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சங்ககாரவுடன் 10 நிமிடங்கள் மாத்திரமே கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, சுகாதார வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எனினும், இந்த வருடம் தேர்தல் வருடம் என்பதால், நெருக்கடியான எந்தவொரு தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை எனவும் அவரிடம் எடுத்துரைத்தேன் என்றார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சங்ககாரவுடனோ அல்லது கிரிக்​கெட் விளையாட்டு வீரர்களுடனோ கலந்துரையாடுவது அர்த்தமற்றது எனத் தெரிவித்த அவர், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதை சங்ககார விரும்ப மாட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!