நிபுணர் குழு அறிக்கையை ரெலோ நிராகரிப்பு!

புதிய அரசியலமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), அந்த அறிக்கையில் பௌத்த பெரும்பான்மையினரின் அரசியல் மேலாதிக்கமே மேலோங்கி காணப்படுவதாக கூறியுள்ளது. புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ரெலோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய இனம் அனுபவித்திருக்கும் பாரபட்சம், அநீதி மற்றும் துன்ப துயரங்களுக்கு முடிவு கட்டும் விதத்தில் அரசியல் தீர்வு அமைய வேண்டும். வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பூரண சுயாட்சி உரிமை கொண்ட அரசியல் நிர்வாக ஏற்பாட்டினை அமைப்பதாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இனப்பிரச்சினையின் அடித்தளமாக இருந்துவரும் ஒற்றையாட்சி முறைக்குப் பதிலாக, சமஷ்டி ஆட்சி முறை என்று அழைக்கப்படும் இணைப்பாட்சி முறையில் அமைய வேண்டும். ஆனால், தற்போதைய நிபுணர் குழுவின் அறிக்கையில் அவற்றிற்கு இடமில்லை, அந்தவகையில் குறித்த அறிக்கையை நிராகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

நிபுணர் குழுவின் அறிக்கையின் பிரகாரம் ஒற்றையாட்சி முறை தொடர்ந்து நீடிப்பதற்கு மிகச் சாதுரியமாக பிரேரிக்கப்பட்டிருக்கின்றது. பௌத்தம் அரச மதம் என்ற சட்ட அந்தஸ்து தொடர்ந்து பாதுகாக்கப்படுவதற்கும் வழி அமைக்கப்பட்டுள்ளது. இது, ஏனைய மதங்கள் தொடர்ந்தும் அநாதை மதங்கள்போல கணிக்கப்படுவதற்கும், நடத்தப்படுவதற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கின்றது.

அரைகுறையான அதிகாரங்களை மாத்திரமே மாகாணசபைகளுக்கு வழங்கியிருக்கும் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் ஆக்கபூர்வமாக எந்தவொரு முன்னேற்றகரமான யோசனையும் காணப்படவில்லை. பாரிய சிங்களக் குடியேற்றங்களுக்கு அடிகோலியுள்ள மகாவலி அபிவிருத்தித் திட்டம் உட்பட இப்போது செயற்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் தற்போதைய நடைமுறைகளே தொடர்ந்தும் பின்பற்றப்படும்.

மாகாணசபைகள் மூலம் பிரதிநிதிகள் அச்சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பதிலாக, மாகாணசபை உறுப்பினர்கள் மத்தியில் இருந்தே அத்தெரிவு இடம்பெறுவது என்பது, மாகாண சபைகளின் சுயாதீனத்தை கேள்விக்குரியதாக மாற்றுவதோடு, ஒற்றையாட்சி முறைக்கு வலுவூட்டுவதுமாகவே அமையும்.

தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இணைந்த வடகிழக்கு மாநிலம் என்பது வெறும் அரசியல் கனவாகவே நீடிக்கக்கூடிய விதத்தில், அருகருகாக அமைந்திருக்கும் இரண்டு அல்லது மூன்று மாகாணங்களின் இணைப்புப் பற்றிய பிரேரணை அமைந்திருக்கிறது.

சம்பந்தப்பட்ட மாகாணங்களில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற விடயமானது, சிங்களக் குடியேற்றத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாணத்தை வடக்கிலிருந்து தொடர்ந்து தனிமைப்படுத்தி வைப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

ஒட்டுமொத்தத்தில் தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகளை தொடர்ந்து நிராகரிக்கும் வகையில் நிபுணர் குழுவின் அறிக்கை அமைந்துள்ளது. இதனை மக்களுக்கு தெட்டத் தெளிவாக தெரிவிக்கத் தவறினால் எமது மக்களுக்கு துரோகம் செய்தவர்களாகி விடுவோம். அந்தவகையில், இந்த அறிக்கையை நிராகரிப்பதோடு, நீதியான அரசியல் தீர்வுக்காக தொடர்ந்தும் பாடுபடுவோம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!