மாலியில் இருந்து வெளியேறுமா சிறிலங்கா இராணுவம்?

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவத்தினரை விலக்கிக் கொள்வது குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மாலியின் மத்திய பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை காலை, சிறிலங்கா இராணுவ அணி ஒன்று கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியதில், இரண்டு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 6 படையினர் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட கப்டன் தர அதிகாரி மேஜராகவும், கோப்ரல் தர அதிகாரி சார்ஜன்ட்டாகவும் நேற்று பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சிறிலங்கா இராணுவ அணி தாக்குதலுக்குள்ளாகிய போதிலும், மாலியில் தொடர்ந்தும் தமது படையினர் தங்கியிருப்பர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

“மாலியில், இருந்து சிறிலங்கா இராணுவத்தினரை விலக்கிக் கொள்வது குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.

இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட படையினரின் சடலங்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

காயமடைந்தவர்களுக்கு மாலியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் கொழும்புக்குத் திரும்பமாட்டார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகள், வழங்கப்படும். ஐ.நாவின் மூலமும் இழப்பீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!