சீனாவிடம் இருந்து சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன்

சீனாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து விரைவில் 1 பில்லியன் டொலர் இலகு கடன் சிறிலங்காவுக்குக் கிடைக்கவுள்ளதாக, சிறிலங்காவுக்கான சீன தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

கொழும்பு- கண்டியை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கு இந்த நிதி செலவிடப்படவுள்ளது.

நிதிப் பற்றாக்குறையினால் இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளாக இழுபறிக்குள்ளாகியிருக்கிறது.

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதல் கட்டம் சீனாவின் இந்த நிதியுதவியைக் கொண்டு நிறைவேற்றப்படும். இரண்டாவது கட்டம், சிறிலங்கா நிறுவனங்களாலும், மூன்றாவது கட்டம் ஜப்பானிய கடன்களின் மூலமும் நிறைவேற்றப்படவுள்ளன.

முன்னதாக சீனாவிடம் இருந்து கிடைக்கவுள்ள 1 பில்லியன் டொலர் நிதியைக் கொண்டு, சிறிலங்கா அரசாங்கம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாக மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்திருந்தார்.

எனினும், இதுவும், சீனாவின் எக்சிம் வங்கியிடம் கிடைக்கவுள்ள 1 பில்லியன் டொலர் கடனும், ஒன்றா என்பதை சீனாவுக்கான தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு உறுதிப்படுத்தவில்லை.

அதேவேளை, சீன அபிவிருத்தி வங்கியுடன் குறுங்காலக் கடன்கள் தொடர்பாக சிறிலங்கா பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

சீனா வழங்கிய கடன்களால் சிறிலங்கா கடன்பொறிக்குள் தள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள கருணாசேன கொடிதுவக்கு,

“அந்தக் கருத்துடன் நாங்கள் உடன்படவில்லை. கடன்களைப் பெற்றுக்கொள்ளும்படி எங்களிடம் சீனா ஒருபோதும் கட்டாயப்படுத்தியதில்லை.

நாம் பெற்ற கடன்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அது எமது பொறுப்பு. சீனா அல்லது வேறு நாட்டை குற்றம்சாட்டுவது நியாயமில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!