அமைச்சுக்களின் செயலர்கள், திணைக்கள தலைவர்களுடன் வடக்கு ஆளுநர் சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அரசாங்கத்தின் நிரல் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களை சந்தித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு மாகாணமாக வடக்கு மாகாணம் காணப்படுவதால் அது அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கியுள்ளதனை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய ஆளுநர், நிரல் அமைச்சுக்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து செயற்பட அனைவரும் முன்வர வேண்டுமென்றும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் நிரல் அமைச்சுக்களுடன் வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் இணைந்து பணியாற்றக்கூடிய சாத்தியமான வழிமுறைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் மத்திய மற்றும் மாகாண இரு தரப்புக்களும் இணைந்து செயற்படுவதனூடாக மக்களுக்கு தேவையான அபிவிருத்தியினை காத்திரமாகவும் துரிதமாகவும் வழங்கமுடியும் என்பதனையும் ஆளுநர் இதன்போது நிரல் அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

விவசாய அமைச்சு, காணி அமைச்சு, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு, கடல்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு, போக்குவரத்து மற்றம் சிவில் விமான சேவைகள் அமைச்சு உள்ளிட்ட நிரல் அமைச்சின் அதிகாரிகளும் ரயில் திணைக்களம், நில அளவைத் திணைக்களம், காணி ஆணையாளர் நாயக திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்களும் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!