13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை மங்கள முனசிங்க தெரிவு குழு உறுதிப்படுத்தியது – பிரேமதாவின் சிரார்த்த தினத்தில் சம்பந்தன் எடுத்துரைப்பு

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை மங்கள முனசிங்க தெரிவுகுழு உறுதிப்படுத்தியதாக பிரேமதாவின் 25 ஆவது சிரார்த்த தினத்தில் சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒரு போதும் நிரந்தர தீர்வாக அமையாது. இதனை உணர்ந்து கொண்டதாலேயே மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அன்று மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவு குழுவை நியமித்தார் என தெரிவித்த எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் , தேசிய பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்த அரசியல் தலைமைத்துவத்தை துரதிஷ்டவசமாக இழந்து விட்டோம் என ரணசிங்க பிரேமதாசவினுடைய 25 ஆவது சிரார்த்த தின நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

பிரேமதாச முன்னெடுத்த சில முக்கிய விடயங்கள் தொடர்பில் குறிப்பிட வேண்டும். வீடற்றவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்பது அவரது கனவாக காணப்பட்டது. அதன்படி வீடற்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடுகளை வழங்கும் நோக்கில் குடிமனை திட்டத்தை முன்னெடுத்தார். அத்திட்டத்தில் அவர் தனிப்பட்ட வகையிலும் நிதியினை முதலீடு செய்திருந்தார்.

மேலும் அவரது ஆட்சி காலத்திலே பலருக்கு வேலைவாய்ப்பினை வழங்கினார். புதிய ஆடைத்தொழிற்சாலைகளை நிறுவியதோடு, அதன்மூலமாக பெருமளவிலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தார். பிரேமதாசவின் காலப்பகுதியில் எமது நாட்டின் ஏற்றுமதி அளவு விரிவடைந்ததோடு, பொருளாதாரமும் முன்னேற்றம் அடைந்தது. அதே போன்று ஜனநாயக நாடொன்றில் இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். அனைவரும் ஒரே நீதியின் கீழ் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதே மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாவினுடைய எதிர்பார்ப்பாகக் காணப்பட்டது .

பிரிக்கப்படாத நாட்டில் அனைத்து இன மக்களும் சம அதிகாரத்துடன் வாழ வேண்டும். சம அளவான அதிகாரங்களுடன், ஒரே நீதியின் கீழ் ஒன்றிணைந்து வாழ வேண்டும் . இதுவே அவரது எதிர்பார்ப்பாக காணப்பட்டது. 13ஆவது சீர்திருத்தத்தில் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக சில விடயங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு அது நிரந்தர தீர்வாக அமையவில்லை. மாறாக பாராளுமன்ற தெரிவிக்குழுக்கள் ஊடாக தீர்வை நோக்கி தமிழ் மக்களின் பிரச்சினைகள் நகர்த்தப்பட்டது.

இதனப்படையில் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்ட மங்கள முனசிங்க ஆணைக்குழுவினால் தேசிய பிரச்சினை தொடர்பில் சிறந்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. குறித்த ஆணைக்குழுவிற்கான தலைமைத்துவமானது ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் அல்லாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நியமிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கான ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்த அரசியல் தலைமைத்துவத்தை துரதிஷ்டவசமாக இழந்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!