கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முன் பிணை கோரவுள்ளார் அட்மிரல் கரன்னகொட

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், தாம் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட முன் பிணை கோரி நீதிமன்றத்தை நாடவுள்ளார்.

ராவய சிங்கள வாரஇதழை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

இந்த வழக்கை விசாரிக்க, மூன்று பேர் கொண்ட ட்ரயல் அட் பார் அமர்வு ஒன்றை அமைப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், அட்மிரல் வசந்த கரன்னகொட, உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றைத் தாக்கல் செய்து முன்பிணை கோருவதற்குத் தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது.

அதேவேளை, அட்மிரல் வசந்த கரன்னகொடவை வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக, மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தனர்.

அத்தடன், இது தொடர்பாக, சிறிலங்கா அதிபரை கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!