போர்க்குற்றத்தை ஒப்புக் கொண்டு காட்டிக் கொடுத்து விட்டார் ரணில் – மகிந்த குற்றச்சாட்டு

பயங்கரவாதத்தை ஒழிப்பது அடிப்படையில் ஒரு போர்க்குற்றம் அல்ல என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த மக்கள் ஐக்கிய முன்னணியின் 22 ஆவது ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் வடக்கில் மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, 30 ஆண்டு போரில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன என்று ஒப்புக் கொண்டிருப்பது தொடர்பாக மகிந்த ராஜபக்ச இங்கு கருத்து வெளியிட்டார்.

அந்தக் காலகட்டத்தில் அத்தகைய போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், தீவிரவாதத்தை ஒழிப்பது அடிப்படையில் போர்க்குற்றம் அல்ல என்றும் அவர் கூறினார்.

போர்க்குற்றம் நடந்தது என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பது நாட்டைக் காட்டிக் கொடுத்தது போலாகும்.

போரில் இராணுவச் சிப்பாய் அல்லது எந்தவொரு நபரும் ஏதாவது குற்றம் செய்திருந்தால், அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!