தீவிரவாதிகளின் தாக்குதலில் 27 இராணுவ வீரர்கள் பலி : கடும் கோபத்தில் ஈரான்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் ஈரானின் சிஸ்டான் பகுதி எல்லை பாதுகாப்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு புகுந்த தீவிரவாதிகள் இராணுவ வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் 27 இராணுவ வீரர்கள் பலியாகினர்.

இந்தியாவின் எல்லை மாநிலமான காஷ்மீரில் புல்வா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருக்கும் ஜெய்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பினர் பொறுப்பெற்றனர்.

இந்த நிலையில், ஈரானிலும் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாதிகள் தற்கொலை படைத்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் ஈரானின் சிஸ்டான் பகுதியிலுள்ள எல்லை பாதுகாப்பு பணியில் ஈரான் இராணுவம் ஈடுபட்டிருந்தது. அப்போது அங்கு புகுந்த தீவிரவாதிகள் இராணுவ வீரர்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தியதில் 27 இராணுவ வீரர்கள் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஸ் அல்-அடில் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த அமைப்பும், இந்திய இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஸ்-இ- முகமது தீவிரவாத அமைப்பும் பாகிஸ்தானில் இருந்து இயங்குகின்றன.

எனவே, இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஈரான் இராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது அலி ஜாப்ரி தெரிவிக்கையில்,

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இது பாகிஸ்தான் அரசுக்கு நன்றாக தெரியும். இதற்கு பாகிஸ்தான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

இந்த தாக்குதலில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு தொடர்பு இருந்தால் அவர்களுக்கும் தக்க பதிலடி கொடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!