ஐ.நா தீர்மானத்தில் தளர்வுகளை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் இணக்கம் – சிறிலங்கா அரசு

சிறிலங்கா தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் சில பிரிவுகளைத் தளர்த்துவதற்கு, அனைத்துலக சமூகம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, தினேஸ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போது, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்தார்.

“ஜெனிவா தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், ஐ.நா மனித உரிமைகள் பேரவை, 2012, 2013 மற்றும் 2014 இல் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியது.

படை அதிகாரிகள் மின்சார நாற்காலியில் அமர வைக்கப்படவுள்ளதாகவும், அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளதாகவும் முன்னைய ஆட்சியாளர்கள், பொய்யான பரப்புரைகளை மக்கள் மத்தியில் மேற்கொண்டிருந்தனர்.

2015இல் சிறிலங்கா, தடைகளை எதிர்கொள்ளும் விளிம்பில் இருந்தது. அனைத்துலக தடைகளில் இருந்து நல்லாட்சி அரசாங்கமே சிறிலங்காவை பாதுகாத்தது. மகிந்த ராஜபக்சவையும் நாங்கள் மின்நார நாற்காலியில் இருந்து பாதுகாத்துள்ளோம்.

இந்த நான்கு ஆண்டுகளில், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அரசாங்கத்தை நடத்தியுள்ளோம். தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம்.

மிகப் பொருத்தமான வகையில் நாங்கள் அனைத்துலக சமூகத்துடன் இந்த விவகாரத்தை கையாண்டு வருகிறோம்.

தீர்மானத்தின் சில பிரிவுகளில் தளர்வை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் இணங்கியுள்ளது. பிரச்சினைகளை ஏற்படுத்தாமல், எமது முயற்சிகளுக்கு ஆதரவளியுங்கள்” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!