அரச ஊழியர்களுக்கு இலவச விமானப் பயணச்சீட்டு!

அரசாங்க ஊழியர்களுக்கு இலவச உள்ளூர் விமானச் சீட்டு வழங்குவது தொடர்பிலான யோசனை விரைவில் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படுமென போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

இவ்வருடம் ஓகஸ்ட் முதல் அரசாங்க ஊழியர்களுக்கு இலவச உள்ளூர் விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது அமைச்சில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

அரசாங்க ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஒரு வருடத்துக்கான ரயில்வே வொரன்டுகளுக்கு பதிலாக அவர்கள் உள்ளூர் விமானச் சீட்டொன்றை தெரிவு செய்யும் வகையிலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனடிப்படையில் மூன்று ரயில்வே வொரன்டுக்களுக்கு பதிலாக அரசாங்க ஊழியர்கள் ஒரு உள்ளூர் விமான பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளும் வகையில் இத்தெரிவு அமையுமென்றும் அவர் விளக்கமளித்தார்.

” மிக ஆரம்ப காலத்தில் மூன்று அல்லது நான்கு ரயில்வே வொரன்டுக்களை பயன்படுத்தாத அரசாங்க ஊழியர்களுக்கு விமானச்சீட்டு ஒன்றை வழங்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்துள்ளது. இது தொடர்பில் நான் தற்போது ஆராய்ந்து வருகின்றேன். அதே சலுகையை மீண்டும் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எமது விருப்பம். அமைச்சருடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் இது தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் விரைவில் இந்த யோசனையை அமைச்சரவைக்கு முன்வைப்போம்,” என்றும் இராஜாங்க அமைச்சர் அபேசிங்க தெரிவித்தார்.

இத்தெரிவின்கீழ் அரசாங்க ஊழியர்கள் இரத்மலானையிலிருந்து மத்தள, மட்டக்களப்பு,திருகோணமலை,சீகிரிய,கொழும்பு,பலாலி போன்ற ஏதேனும் தாங்கள் விரும்பிய இடத்துக்கான பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!