கனடாவில் வேலை..ஆசையாக சென்ற தமிழர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

கனடாவில் வேலை வாங்கி தருவதாக ஏஜண்டுகள் கூறியதை நம்பிய தமிழக இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததோடு இந்தோனேசியாவில் இருந்து பரிதாபமான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்ட நிலையில் இந்தோனேசியாவில் நிற்கதியாக நின்றுள்ளனர். அவர்களை இந்தோனேசியா தமிழ்ச் சங்கம் மீட்டுள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் துணைத்தலைவர் சந்திர சேகரன் கூறுகையில், இந்தோனேசிய அரசு சுற்றுலாவை வளர்ச்சி மற்றும் வர்த்தக ரீதியான முன்னேற்றத்திற்காக இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு, ஒவ்வொரு வருடமும் இலவச வருகை குடியுரிமைச் சீட்டு வழங்குகிறது. இதைத்தவறாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தோனேசியாவில் உள்ள சில போலி முகவர்கள் கனடா போன்ற பல்வேறு நாடுகளில் வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கான குடியுரிமைச்சீட்டு இந்தோனேசியாவில் வாங்கித் தருவதாகவும் விளம்பரம் செய்கின்றனர். இதை நம்பி பலரும் ஏமாந்துள்ளனர், கடந்த வருடம் கனடாவில் வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி, மூன்று தமிழக இளைஞர்கள் இந்தோனேசியாவுக்கு வரவழைக்கப்பட்ட நிலையில், தமிழ்ச்சங்கம் அவர்களை மீட்டு தமிழகத்திற்குத் திரும்ப அனுப்பி வைத்தது.

அதே போல் இந்தாண்டு ஜனவரி மாதம் இரண்டு தமிழ் இளைஞர்கள் கனடாவில் வேலை என கூறப்பட்டு ஏமாற்றப்பட்டனர். இப்படி 8 இளைஞர்கள் மொத்தமாக மீட்கப்பட்டனர். ஆளுக்கு தலா 10லிருந்து 12 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளனர். போலி முகவர்கள், வேலை தேடிய அந்த இளைஞர்களைக் கனடா விசா இந்தோனேசியாவில் வாங்கித்தருவதாகச் சொல்லி, இந்தோனேசியா வரவழைத்து, அவர்களை ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளனர்.

அதன்பின் அவர்களிடம் உள்ள பாஸ்போர்ட மற்றும் ஆவணங்களை வாங்கிக் கொண்டு, விசா வாங்கிக் கொண்டு வருவதாகச் சென்று விட்டனர். அதன் பிறகு அவர்களுடைய தொடர்பைத் துண்டித்துக் கொண்டனர். இதனிடையில் குடியுரிமை அதிகாரிகள், இளைஞர்கள் தங்கியிருந்த இடத்தில் சோதனையிட்டு, அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவர்களின் நண்பர்கள் இந்தோனேசியத் தமிழ்ச் சங்கத்தைத் தொடர்பு கொண்டு உதவி கோரினர். இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம், இளைஞர்களுக்கு உதவுவதற்காக இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டபோது, அங்கே ஏற்கனவே அதேபோல் ஏமாற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட ஆறு தமிழ் இளைஞர்கள் இருப்பது தெரிய வந்தது.

பின் இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம் இளைஞர்கள் மீட்டுள்ளது. இளைஞர்களின் பெற்றோருக்குத் தகவல் கூறி அபராத தொகையைக் கட்டி அவர்களை மீட்டோம். இனி வரும் காலங்களில் இது போன்று யாரும் ஏமாறக்கூடாது என அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!