கிழக்கில் முழு அடைப்பு – நீதி கோரித் திரண்ட மக்கள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தியும், கிழக்கில் நேற்று முழு அடைப்புப் போராட்டமும், பாரிய பேரணியும் நடத்தப்பட்டன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில், மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து, முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில், தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில், வணிக நிலையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பாடசாலைகளும், கல்வி நிறுவனங்களும் இயங்கவில்லை.

போக்குவரத்துச் சேவைகளும் செயற்படவில்லை. அரச செயலகங்கள், வங்கிகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் கிழக்கில் நேற்று இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்திருந்தது

நேற்றைய முழு அடைப்புப் போராட்டம் தொடர்பாக வடக்கில் தெளிவான அறிவிப்புகள் வெளியிடப்படாத போதும், கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு ஆதரவாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் வணிக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. சந்தைகள் பல இயங்கவில்லை.

போராட்ட அறிவிப்புத் தொடரபான குழப்பத்தினால் வடக்கில் முழுமையான இயல்புநிலை பாதிக்கப்படவில்லை.

அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, நேற்று மட்டக்களப்பில் பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது. கல்லடிப் பாலத்தில் தொடங்கி, மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை இந்தப் பேரணி இடம்பெற்றது.

இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மதகுருமார், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!