அரசமைப்பை மீறுகிறது கூட்டமைப்பு- கலப்பு விசாரணை பற்றி பேச வே முடியாது! ஜனாதிபதி சீற்றம்

வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய கலப்பு விசா­ர­ணைப் பொறி­மு­றையை ஜெனிவா மாநாட்­டில் வைத்தே இலங்­கைக் குழு நிரா­க­ரித்­து­ விட்­டது. வெளி­நாட்டு நீதி­ப­தி­கள் இங்கு நுழை­வ­தற்கு ஒரு­போ­தும் அனு­ம­திக்­க­மாட்­டோம். கலப்பு நீதி­மன்­றப் பொறி­முறை தொடர்­பில் இங்கு இனி­மேல் எவ­ரும் பேசவே முடி­யாது என்று திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்ளார் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன.

வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளை­யும் உள்­ள­டக்­கிய கலப்பு விசா­ர­ணைப் பொறி­மு­றையை ஏற்­ப­தற்கு இலங்கை அரசு ஜெனி­வா­வில் மூன்­றா­வது முறை­யும் இணக்­கம் வெளி­யிட்­டுள்­ளது. கலப்பு விசா­ர­ணைப் பொறி­மு­றையை இலங்கை அரசு அமைக்­கத் தவ­றி­னால், பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­தின் முன் செல்ல வேண்­டிய நிலமை ஏற்­ப­டும் என்று நாடா­ளு­மன்­றத்­தில் பகி­ரங்­க­மாக எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன்.

இது தொடர்­பில் ஜனாதிபதியின் நிலைப்­பாடு என்ன என்று வெளி­நாட்­டுச் செய்­திச் சேவை ஒன்று கேள்வி எழுப்­பி­யது. அதற்­குப் பதி­ல­ளித்த அவர்,

இலங்­கையை சர்வதேச குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­தின் முன் நிறுத்த எவ­ருக்­கும் அதி­கா­ரம் இல்லை. நாட்­டின் அர­ச­மைப்பை மீறி உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ எவ­ரும் செயற்­பட முடி­யாது.இலங்­கை­யின் நிலைப்­பாட்டை நாட்­டின் ஜனாதிபதியும் அரச குழு­வி­ன­ருமே தீர்­மா­னிப்­பர். இதை மீறி எவ­ரும் செயற்­பட முடி­யாது. நாட்­டின் இறை­யாண்­மை­யைப் பாது­காத்­தும் அர­ச­மைப்­பைக் கருத்­தில்­கொண்­டும் நாம் செயற்­ப­டு­கின்­றோம். இதை மீறி நாம் ஒரு­போ­தும் நடக்­க­மாட்­டோம்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கருத்­துக்­கள் நாட்­டின் அர­ச­மைப்பை மீறு­கின்ற வகை­யில் உள்­ளன. அவர்­கள் தமிழ் மக்­க­ளின் மனங்­க­ளை­யும் புலம்­பெ­யர் அமைப்­பு­க­ளின் மனங்­க­ளை­யும் வெல்­லும் வகை­யில் கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றார்­கள். ஆனால், நாம் நாட்­டின் நல­னை­யும் மூவின மக்­க­ளின் ஒற்­று­மை­யை­யும் கருத்­தில்­கொண்­டு­தான் கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­றோம் என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!