சிறிலங்காவுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது – என்கிறார் வடக்கு ஆளுநர்

சிறிலங்கா அதிபரின் ஒப்புதலைப் பெறாமலேயே ஜெனிவா தீர்மானத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் பிரதிநிதிகளில் ஒருவராக ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்ற சுரேன் ராகவன், நாடு திரும்பிய பின்னர், கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் கூறினார்.

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக, சிறிலங்காவுக்கு அனுப்பப்பட்ட ஐ.நா தீர்மானத்துக்கு, பிரதமர் செயலகத்தில் உள்ள தனி நபர் ஒருவரே அங்கீகாரம் அளித்திருந்தார்.

அதற்கு அவர் சிறிலங்கா அதிபரின் அனுமதியையோ, வேறெந்த அதிகாரிகளின் ஒப்புதலையே பெற்றிருக்கவில்லை.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில்,சிறிலங்காவுக்கு அனைத்துலக சமூகம் உத்தரவிட முடியாது.

சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய உறுதிமொழிகளை செயற்படுத்த தவறிவிட்டது என்று கூறும் தரப்பினர், அனைத்துலக நீதி பொறிமுறையினை நாட முயற்சிக்கின்றமை நாட்டுக்கு எதிரான செயற்பாடாகும்.

அனைத்துலக நீதிபதிகளை உள்வாங்கும் முயற்சிகள் சாத்தியமற்றது.

ஜெனிவா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நாட்டின் சுயாதீனதன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிறைவேற்றப்படும்.

இதற்கு எந்தத் தரப்பினரும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டிய அவசியம் கிடையாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!