மக்களின் விருப்பத்தை கேட்டறிந்து செயற்படுவதே சிறந்தது – மஹிந்த

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்களின் விருப்பத்தை கேட்டறிந்து செயற்படுவதே சிறந்ததாகும் என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தற்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவது பற்றி பேசப்பட்டு வருகின்றது. இதில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை மாத்திரமன்றி தேர்தல் முறைமை, 13 ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் என பல்வேறு விடயங்கள் பின்னிப்பிணைந்துள்ளன.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்தமையினால் ஏற்பட்ட சிக்கல்களை கடந்த காலத்தில் அனைவரும் எதிர்கொண்டோம். அவ்வாறிருக்க 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்து மேலும் பிரச்சினைகளை உருவாக்க முடியாது.

அதேபோன்று தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை. எனவே அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அவர்களால் முடியாது. எனவே தான் மக்களின் விருப்பத்தைக் கேட்டறிய வேண்டும்.

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக அரசாங்கம் தற்போது கொண்டுவருவதற்கு முயற்சிக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் மிகவும் ஆபத்தானதாகும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!