ஐதேக மே நாள் பேரணியை முக்கிய பிரமுகர்கள் புறக்கணிப்பு

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று நடத்தி மே நாள் பேரணியில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை.

சிறிலங்காவில் மே நாள் இன்று கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையில், ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கொழும்பு சுகததாச உள்ளரங்கில் மே நாள் கூட்டத்தை நடத்தியது.

கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த இந்தப் பேரணியில், ஐதேகவின் தவிசாளரான கபீர் காசிம், உபதலைவர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் சாகல ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர்கள், வசந்த சேனநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, பாலித ரங்க பண்டார, பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமிந்த விஜேசிறி, பந்துல பண்டாரிகொட உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவில்லை.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் மீது அதிருப்தி கொண்டுள்ளதால் ஐதேகவின் மே நாள் கூட்டத்தை கட்சியினர் பலரும் புறக்கணிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

கபீர் காசிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மே நாள் பேரணியில் பங்கேற்கவில்லை.

சமிந்த விஜேசிறி உறவினரின் மரணச்சடங்கில் பங்கேற்றதாலும், ரவி கருணாநாயக்க காலியில் சமய நிகழ்வுகளில் பங்கேற்றதாலும் மே நாள் பேரணிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!