“பாகிஸ்தானில் இந்திய சிறுமிகளுக்கு கட்டாய திருமணம்” – விசாரணை கமிஷன் அமைத்து இஸ்லாமாபாத் ஐகோர்ட் உத்தரவு!

இந்தியாவின் அண்டைநாடான பாகிஸ்தானில் சுமார் ஒரு கோடி இந்து மக்கள் வாழ்ந்து வருவதாக கருதப்படுகிறது. ஆனால், அந்நாட்டின் பழைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 75 லட்சம் இந்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கோக்டி மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த ஹோலி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு படைத்த முக்கிய பிரமுகர்கள் இரு இந்து சிறுமிகளை கடத்திச் சென்றனர். பின்னர், ரவீனா(13), ரீனா(15) ஆகிய அந்த சிறுமிகளை ஒரு முஸ்லிம் மதத்தலைவர் கட்டாய மதமாற்றம் செய்து இருநபர்களுக்கு திருமணம் செய்து வைத்த வீடியோ காட்சிகள் அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. இவ்விவகாரத்தால் கொதிப்படைந்த இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த சிறுமிகளை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானில் உள்ள இந்திய தலைமை தூதருக்கு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டார்.

வ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவ்விரு சிறுமிகளையும் உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிந்து மாகாண அரசுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார். இதற்கிடையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் இரு சிறுமிகளும் பாதுகாப்பு கேட்டு தங்கள் கணவர்களுடன் நீதிமன்றத்தை நாடினர். தங்களை யாரும் பலவந்தப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை.

இஸ்லாமிய கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு தாங்களாகவே முன்வந்து மதம்மாறி, தங்களுக்கு விருப்பமானவர்களை திருமணம் செய்து கொண்டோம் என அவர்கள் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும், அவர்கள் இருவரும் பலவந்தமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக அந்த சிறுமிகள் பெற்றோரின் வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார். சிந்து மாகாணத்தில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, இவ்விவகாரம் தொடர்பாக வெளிப்படையாக விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட விசாரணை கமிஷனை அமைத்து இஸ்லாமாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதி அதார் மின்னாலா இன்று உத்தரவிட்டார். இந்த கமிஷனில் பாகிஸ்தான் நாட்டு மனித உரிமைத்துறை மந்திரி ஷிரீன் மஸாரி, பெண்கள் நலத்துறைக்கான தேசிய குழுவின் தலைவர் கவார் மும்தாஜ், மற்றும் வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!