சிறிலங்கா படைகளுக்கு நவீன கருவிகள் வழங்கப்படவில்லை- சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

பாதுகாப்புப் படைகளை தரமுயர்த்துவது மற்றும் பலப்படுத்துவதில் தற்போது கவனம் செலுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, போர் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பாதுகாப்புப் படைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

”சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், சிங்கப்பூர் போன்ற ஏனைய நாடுகளில், வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் பங்கு பாதுகாப்புப் படைகளுக்கு ஒதுக்கப்படுகிறது.

பொருளாதாரத்துக்கு முன்பாக, ஒரு நாட்டின் பாதுகாப்பு மீது முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

சிறிலங்கா பாதுகாப்புப் படைகளுக்கு நவீன கருவிகள் வழங்கப்படவில்லை. புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப தரமுயர்த்தல் வசதிகள் அளிக்கப்படவில்லை.

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட போர் விமானங்களையே நாங்கள் இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இப்போது எங்களிடம் ஒரே ஒரு போர் விமானம் தான் இருக்கிறது.

விமானப்படைக்கு நவீன போர் விமானங்களை வழங்க வேண்டும். கடற்படைக்கும் நவீன கப்பல்கள் வழங்கப்பட வேண்டும்.

பாதுகாப்புப் படையினருக்கான, இருப்பிடம், ஊதியம், கொடுப்பனவுகள், உணவு, சீருடை மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நலன்புரி வசதிகள் முன்னேற்றப்பட வேண்டும்.

எனது பதவிக்காலத்தில், அவர்களுக்கு பாலாடைக் கட்டி, அப்பிள் என்பனவற்றை வழங்கியிருந்தேன். அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உறுதியாக இருப்பதை நாங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வெளியக பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எமக்கு இல்லை என்று யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே பாதுகாப்புப் படைகளுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினரின் பயிற்சிகளுக்குப் போதுமான வெடிபொருட்கள் கிடைக்கவில்லை என்று நான் அறிகிறேன்.

அரசியல் தலையீடுகளில் இருந்து விலகி பாதுகாப்பு படையினர் சுதந்திரமாக செயற்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!