கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? – வட்டுவாகலில் கவனயீர்ப்புப் போராட்டம்

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று முல்லைத்தீவு – வட்டுவாகலில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினர்.

போரின் முடிவில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த இடமான வட்டுவாகல் பாலத்துக்கு அருகே- சிறிலங்கா கடற்படையின் கோத்தாபய தளம் அமைந்துள்ள இடத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், வட்டுவாகல் பாலத்துக்கு அருகே கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தை முன்னிட்டு, ஊடகவியலாளர் குமணனின் “உத்தரிப்புகளின் அல்பம் நீதி –ஏக்கம் – கண்ணீர்” என்ற தலைப்பிலான ஒளிப்படக் காட்சிப்படுத்தலும் இடம்பெற்றிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைத் தேடும் உறவுகளின் அவலங்களை எடுத்துக் கூறும் ஒளிப்படங்கள் வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் நேற்றுப் பகல் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!