அம்பாந்தோட்டையின் பாதுகாப்பு சீனாவிடம் வழங்கப்படாது சிறிலங்கா திட்டவட்டம்

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் செயற்பாடுகள் எந்தவொரு நாட்டுக்கும் வழங்கப்படாது, அதனை சிறிலங்காவே கையாளும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில், கடந்த சனிக்கிழமை நடந்த ஆசிய – ஐரோப்பிய அரசியல் மன்றத்தின் மூன்றாவது கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

“அம்பாந்தோட்டை துறைமுகத்தை பலரும் சீன இராணுவத் தளமாக கருதிக் கொண்டிருக்கின்றனர்.

அங்கு ஒரு இராணுவ தளம் அமைக்கப்படவுள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். ஆனால் அது சிறிலங்கா கடற்படையின் தளமாகும்.

அந்த தளத்தை சிறிலங்கா கடற்படையின் றியர் அட்மிரல் ஒருவர் கட்டுப்படுத்துவார்.

எந்த நாட்டில் இருந்தும், எந்தக் கப்பலும், அங்கு வர முடியும். ஆனால் துறைமுகத்தின் செயற்பாடுகளை நாங்கள் தான் கட்டுப்படுத்துவோம்.

தற்போதைய அனைத்துலக போக்குகளைப் புரிந்து கொண்டு, எல்லா நாடுகளுடனும் கொழும்பு நட்புரீதியான, சுமுகமான உறவுகளை பேணுகிறது.

எமது வரலாற்றில் இருந்து இந்தியா எமது பங்காளராக இருந்து வருகிறது.

அமெரிக்காவின் எதிர்ப்பு இருந்தாலும், சான்பிரான்சிஸ்கோ மாநாட்டில் நாங்கள் ஜப்பானுடன் இணைந்தோம்.

மக்கள் சீன குடியரவை அங்கீகரித்து அதனுடன் முதலாவது வணிக உடன்பாட்டை சிறிலங்கா செய்து கொண்டது.

இந்த நிலைமையை நாங்கள் தொடருவோம். யாருடைய போட்டியிலும் நாங்கள் சிக்கிக் கொள்ளமாட்டோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!