உள்நாட்டு விவகார அமைச்சர் பதவி – சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறு ஐதேக பரிந்துரை

உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குப் பரிந்துரை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா உள்ளிட்ட ஆறு புதிய அமைச்சர்களை நியமிக்குமாறு சிறிலங்கா அதிபருக்குப் பரிந்துரை செய்ய ஐதேக ஏற்கனவே முடிவு செய்திருந்தது.

இதன்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்ட அமைச்சுக்களுக்கு மேலதிகமாக, உள்நாட்டு விவகார அமைச்சுப் பதவியையும் வழங்க நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பயணமாக ஜப்பானுக்குச் செல்லும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை இந்தப் பதவிக்கு நியமிக்குமாறு பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது.

அதேவேளை, உள்நாட்டு விவகார அமைச்சை பொறுப்பேற்கும் வரை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அந்த அமைச்சைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சரத் பொன்சேகாவுக்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!