சாய்ந்தமருதில் குண்டுகள் வெடித்த வீட்டில் 15 சடலங்கள் மீட்பு –கிழக்கில் பெரும் பதற்றம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைப் பிரதேசத்தில் நேற்று மாலை ஐ.எஸ் அமைப்பின் முறைவிடங்கள் என சந்தேகிக்கப்படும் இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது இடம்பெற்ற மோதல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளில் குறைந்தது15 பேர் உயிரிழந்தனர்.

புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், சம்மாந்துறைப் பகுதியில் உள்ள மறைவிடம் ஒன்றை நேற்று மாலை சிறப்பு அதிரடிப்படையினர் முற்றுகையிட்டனர்.

அங்கிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், ஐஎஸ் அமைப்பின் பதாதை, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் அணிந்திருந்த உடைகள், தற்கொலைத் தாக்குதல் அங்கிகள், குண்டுகளைத் தயாரிப்பதற்கான பொருட்கள், 150 ஜெலிக்னைட் குச்சிகள், ஒரு இலட்சம் இரும்புக் குண்டுகள் (போல்ஸ்) ஆளில்லா ட்ரோன் கருவி, மற்றும் பெருமளவு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

ஐ.எஸ் அமைப்பினால் வெளியிடப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகளின் படம் இந்த மறைவிடத்திலேயே எடுக்கப்பட்டதாகவும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட பதாதை மற்றும் உடைகளே சிக்கியதாகவும் தெரிய வருகிறது.

அதேவேளை, சாய்ந்தமருது பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றொரு மறைவிடத்தைச் சுற்றிவளைத்த போது, ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து அங்கு மோதல்கள் இடம்பெற்றன. இதன்போது தற்கொலைக் குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

அந்த இடத்தை முழுமையாக சிறிலங்கா இராணுவத்தினர் சுற்றிவளைத்திருந்தனர். இரவில் தேடுதல் நடத்துவது கடினம் என்பதால் இன்று காலையில் இருந்து, தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த வீடு ஒன்றில் இருந்து தற்கொலைக் குண்டுதாரிகள் என சந்தேகிக்கப்படுபவர்களின் சடலங்கள் உள்ளிட்ட 15 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட சடலங்களில் 6 ஆண்களும், 6 சிறுவர்களும், 3 பெண்களின் சடலங்களும் உள்ளடங்கியுள்ளன.

மேலும் சிலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளை, நிந்தவூர் பள்ளிவாசலுக்குப் பின்புறமாக கேட்ட குண்டுச்சத்தத்தை அடுத்து, அங்கு விரைந்து சிறப்பு அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதையடுத்து, இரண்டு மணிநேரத்துக்கு மேலாக இரண்டு தரப்புகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது.

இதுவரை அந்தப் பகுதிகளில் 20இற்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவங்களை அடுத்து, நேற்று மாலை தொடக்கம் கல்முனை, சம்மாந்துறை, சாய்ந்தமருது காவல்துறை பிரிவுகளில் காலவரையற்ற ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அங்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

கல்முனை உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!