போதிய நடவடிக்கை இல்லை – சிறிலங்கா அரசை சாடுகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டு வருவதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று, கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களைச் சந்தித்த அவர்,

“தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நான் திருப்தியடையவில்லை.

எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. படையினர்,கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் இடங்களைத் தேடிச் செல்கின்றனர். ஆனால், இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று நான் உணருகிறேன்.

தெகிவளை தற்கொலைக் குண்டுதாரியின் உண்மையான இலக்கு தெகிவளை புனித மரியாள் தேவாலயம் ஆகும். அதுபோலவே மட்டக்களப்பு குண்டுதாரியினது இலக்காக, மட்டு.புனித மரியாள் தேவாலயமே இருந்துள்ளது.

மேலதிக அழிவுகளை தடுப்பதற்காக நீர்கொழும்பு முழுவதும், தேடுதல் நடத்தப்பட வேண்டும்.

அதிகாரிகள் சிலரைப் பிடித்து விசாரித்து விட்டு விடுதலை செய்கின்றனர். அவர்கள் நாட்டை விட்டு தப்பி விடுவார்கள். குறைந்தபட்சம் அவர்களின் கடவுச்சீட்டையாவது முடக்க வேண்டும்.

சிறிலங்கா அதிபர் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். ஆனால் இத்தகைய குழுக்களினால், அர்த்தமுள்ள ஏதாவது நடக்குமா என்பது சந்தேகம் தான்.

கடந்த காலங்களிலும் இத்தகைய குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அவற்றின் முடிவுகள் என்னவென்று தெரியாது.

இந்த தாக்குதலின் பின்னால், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஏதாவது தொடர்புகள் இருந்தால் – அவர்கள் கைது செய்யப்பட வேண்டும், விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இதற்குத் தீர்வு காணாவிட்டால், நாங்கள் வீதிகளுக்கு எடுத்து வருவோம்.

முஸ்லிம்களை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். அவர்களை நாங்கள் பாதுகாப்போம்.

சில அரசியல்வாதிகளின் பேச்சுக்களை கேட்ட போது, அவர்களுக்குள் ஒற்றுமையில்லை என்று உணர்ந்தேன்.

அரசியல்வாதிகள் மலிவான விளம்பரம் தேடிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். தமது தவறுகளை மறைக்க மற்றவர்கள் மீது பழியைப் போட முனைகிறார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!