போர்க்குற்ற விசாரணையை திசைதிருப்ப மௌனம் காத்ததா அரசாங்கம்? – சுரேஸ்

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேசத்தை நாட்டிற்குள் அனுமதிக்கும் அரசாங்கம், ஏன் யுத்தக் குற்ற விசாரணைகளுக்காக சர்வதேசத்தை அனுமதிக்க மறுக்கின்றது என கேள்வியெழுப்பியுள்ளார் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

சர்வதேச யுத்தக்குற்ற விசாரணைகளை திசைதிருப்பி அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவா தாக்குதல்கள் குறித்து அறிந்திருந்தும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அதற்கு இடமளித்தது எனவும் அவர் சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.

‘இந்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவும் பயங்கரவாத அமைப்பு க்களை முற்றாக அழிப்பதற்காகவும் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து அதிகாரிகள் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையின்போது சர்வதேச விசாரணைகளை எதிர்பார்க்கும் அரசாங்கம் ஏன் யுத்தக் குற்றங்களுக்காக சர்வதேசத்தை அனுமதிக்க முடியாது எனவும் கேள்வியெழுப்பினார்.

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண நிலையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளையும் உடனடியாக பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்குமாறு அஸ்கிரிய பீடத்தின் பிரதம செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் வலியுறுத்தியிருந்தார்.

புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுதலை செய்வது எவ்வாறு சாத்தியமானது எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!