துமிந்தவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு தவறானது – விடுவிக்குமாறு கோரிக்கை!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என்று அரச தலைவர் சட்டத்தரணி அணில் சில்வா தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பில் பல குறைபாடுகள் காணப்பட்டன. துமிந்த சில்வாவை குற்றவாளியாக்கும் முனைப்பில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காடடினார். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற விசாரணையின் போதும், இவ்விடயத்தை நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் சட்டத்தரணி முன்வைத்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த வழக்கை விசாரணை செய்த போது முன்வைக்கப்பட்ட சாட்சி, சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டதா என்று ஆராயாமல் அரச சட்டத்தரணியின் வாதத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அரச தலைவர் சட்டத்தரணி அணில் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றைக் கவனத்திற்கொண்டு துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறு சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!