பாடசாலைகளை இன்று திறக்க வேண்டாம்- மகாநாயக்கர்கள் கோரிக்கை

தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளை இன்று ஆரம்பிக்கும் முடிவை மீளாய்வு செய்யுமாறு மல்வத்த, அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதலாம் தடவைப் பாடசாலை விடுமுறைக் காலத்தில், ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, சிறிலங்காவில் பதற்றமான சூழல் நிலவி வருவதுடன், பாதுகாப்புக் கெடுபிடிகளும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் இன்று நாடெங்கும் உள்ள சுமார் 10 ஆயிரம் பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரும், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரும் இணைந்து, சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

முழு நாட்டினதும் பாதுகாப்பு இன்னமும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.எனவே, பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டு அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் ஒரே நாளில் வகுப்பை ஆரம்பிக்க வேண்டும் என்றும் மகாநாயக்கர்கள் கோரியுள்ளனர்.

இன்று அனைத்துப் பாடசாலைகளும் மீளத் திறக்கப்பட்டாலும், 6ஆம் தரம் தொடக்கம், 13ஆம் தரம் வரையான மாணவர்களுக்கே வகுப்புகள் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!