அன்று தமிழர்களுக்கு இன்று முஸ்லிம்களுக்கு! – சிறிதரன் எம்.பி

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றால் தமிழர்கள் எதிர்கொண்ட அவலங்களையே முஸ்லிம் சமூகத்தினர் தற்பொழுது எதிர்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சி கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அப்பாவி முஸ்லிகள் மீது தாக்குதல்களும், சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் பெயர் வைத்திருக்கின்ற காரணத்துக்காக பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. தமிழர்கள் பட்ட அவலங்களை அவர்கள் தற்பொழுது எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் சகோதரர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் சகோதரி ஒருவர் பயணித்த காரணத்துக்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்த பஸ் ஆனையிறவில் 30 நிமிடங்கள் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த பஸ் எழுதுமட்டுவாழ் பகுதியில் ஏற்கனவே 17 நிமிடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த பயணிகளுக்கும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி வடக்கில் பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஊடகங்கள் முஸ்லிம் தலைவர்களைப் பிழையாக சித்தரிப்பது நிறுத்தப்பட வேண்டும். வேண்டும் என்றே சில ஊடகங்களும், இணையத்தளங்களும் முஸ்லிம் தலைவர்களை இலக்குவைத்து மோசமான பிரசாரங்களை முன்னெடுக்கின்றன.” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!