ரமலான் தொழுகையின்போது துப்பாக்கி சூடு- மசூதியில் திடீர் பதற்றம்

லண்டனில் உள்ள செவன் கிங்ஸ் மசூதியில், ரமலான் தொழுகையின் போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள இல்போர்டில் செவன் கிங்ஸ் மசூதி உள்ளது. இங்கு நேற்று இரவு முஸ்லீம்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். தொழுகை தொடங்கிய சிறிது நேரத்தில், முகமூடி அணிந்தபடி கைத்துப்பாக்கியுடன் வந்த ஒருவன், துப்பாக்கியால் சுட்டபடி உள்ளே மசூதிக்குள் நுழைய முயன்றுள்ளான்.

துப்பாக்கி சத்தம் கேட்டு தொழுகையில் இருந்தவர்களில் சிலர் வெளியே ஓடிவந்து தைரியமாக அந்த நபரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவனைப் பிடிக்க முயற்சிக்கவே அவன் தப்பியோடியுள்ளான். தகவல் அறிந்து வந்த போலீசார், மசூதியை சுற்றிலும் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தப்பி ஓடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நள்ளிரவு வரை பதற்றம் நீடித்தது. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பு இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!