தாக்குதல்களை தடுக்க சிறிலங்காவுக்கு கிடைக்கவுள்ள நவீன தொழில்நுட்ப உதவிகள்

இஸ்லாமிய தீவிரவாதிகள் மேலும் பல தாக்குதல்களை நடத்தும் அச்சுறுத்தல்கள் இருந்த போதும்,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பெரும்பாலான வலையமைப்புகளை சிறிலங்கா பாதுகாப்பு பிரிவினர் அழித்து விட்டனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு நேற்று செவ்வி ஒன்றை அளித்துள்ள அவர்,

“குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்று விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அந்த தொடர்புகள் எந்தளவுக்கு ஆழமானது என்பதைக் கண்டறிவதில் அதிகாரிகள் இப்போது ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை விசாரணைகள் பல பகுதிகளுக்கு அப்பால் செல்லவில்லை, எனவே நாம் சூழ்நிலை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இது கட்டுப்படுத்தக் கூடியது, இதனை அடக்கி விட முடியும்.

இன்னொரு சுற்றுத் தாக்குதல்களை நடத்த விடாமல், வழமை நிலையை கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த தாக்குதலில் அனைத்துலக தொடர்பு உள்ளது. எனவே நாங்கள் அந்த பாதையிலேயே பணியாற்றுகிறோம்.

நிச்சயமாக இதற்குப் பின்னார் ஐ.எஸ் தொடர்பு உள்ளது. அதற்காக ஐஎஸ் அமைப்பு நேரடியாகத் தொடுத்த தாக்குதல் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.

சதி, தாக்குதல் திட்டம், நிதியுதவிகள் மற்றும் வெடிபொருட்கள் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டனவா என்பது உள்ளிட்ட வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து, விசாரணைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தை மீண்டும் முகாம்களுக்குள் திருப்பி அழைத்துக் கொள்ளவே விரும்புகிறேன்.

எதிர்கால அச்சுறுத்தல்களை சமாளிக்க, தொலைத்தொடர்பு கருவிகள், கண்காணிப்பு கருவிகள் உள்ளிட்ட உயர்தர தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு இந்தியா, சீனா, அமெரிக்கா, இஸ்ரேல், அவுஸ்ரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆகிய நாடுகள், விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்தக் குண்டுத் தாக்குதல்களுக்கு கட்டளை வழங்கி, கட்டுப்படுத்துவராக சஹ்ரானே செயற்பட்டுள்ளார்.

குண்டுகளுக்கு பெரும்பாலும் உள்ளூர் வெடிபொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் சில பொருட்கள், தென்னிந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழ் நாட்டில் இருந்து கிடைத்திருக்கக் கூடும்.

சில சந்தேக நபர்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளனர். குறிப்பாக, கேரளா, பெங்களூர, காஷ்மீர் பகுதிகளுக்கு பயிற்சிக்காக சென்றுள்ளனர். அவர்களின் பயணங்கள் தொடர்பான விபரங்களைக் கண்டறிவதில் விசாரணையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!