இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க ரஷ்யாவின் உதவியை நாடுகிறதா சிறிலங்கா?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவில் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாக, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ்வுடன், சிறிலங்கா தூதுவர் தயான் ஜயதிலக, பேச்சு நடத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் அனைத்துலக தீவிரவாதம் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்தப்பின் போது, சிறிலங்காவில் ஏப்ரல் 21ஆம் நாள் நடந்த குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கலைத் தெரிவித்த ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர், இந்த தீவிரவாத செயற்பாடுகளையும் கண்டித்துள்ளார்.

1990களில் ரஷ்யாவில் தொண்டர் நிறுவனங்களின் மூலம் பரவிய வகாபியிசம் மற்றும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் ரஷ்யா எதிர்கொண்ட எதிர்மறையான அனுபவங்களையும் அந்த நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இந்தச் சந்திப்பின் போது எடுத்துரைத்துள்ளார்.

இராணுவத்தின் ஜெனரல் தர நிலையில் உள்ள பிரதி வெளிவிவகார அமைச்சர் ஒலேக் சைரோமோலோரோவ், சோவியத் ஒன்றிய காலத்தில் கேஜிபி என அழைக்கப்பட்டு பின்னர், எவ்எஸ்பி ரஷ்ய சமஷ்டி புலனாய்வு சேவை அமைப்பின், பிரதி பணிப்பாளராக இருந்தவர் ஆவார்.

இரண்டு பத்தாண்டு காலம் எவ்எஸ்பியில் உயர் பதவியில் இருந்த அவர், டிகேஆர் எனப்படும், புலனாய்வு முறியடிப்புப் பிரிவின் தலைவராகவும் 2004 தொடக்கம் 2015 வரை பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!