‘குற்றஞ் சுமத்துவதைவிடுத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்க‍ை எடுக்கவும்’

எதிர் கட்சி மீது குற்றம் சுமத்திக்கொண்டிருக்காமல் விழுந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.

அத்துடன் எனது உத்தியோக பூர்வ வாசஸ்தலம் அமைந்திருக்கும் வீதி மூடப்பட்டிப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதலினால் நாட்டு மக்களினதும் வியாபார சமுகத்தினதும் பொருளாதாரத்துக்கு மேற்கொள்ளப்பட்ட பாதிப்பில் இருந்து மீளும்வரை விசேட சலுகை பொருளாதார முகாமைத்துவ பொதியொன்றை உடனடியாக செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் தேசிய கொள்கை, பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரான பிரதமர் உட்பட அரசாங்கம் இதுதொடர்பாக எடுக்க இருக்கும் நடடிக்கை என்ன என்பது தொடர்பில் சபைக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

எனவே அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு குற்றம் சுமத்திக்கொண்டிருக்காமல் விழுந்துருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம். அத்துடன் எனது உத்தியோக பூர்வ வாசஸ்தலம் அமைந்தருக்கும் வீதி மூடப்பட்டிப்பதாக பொய் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதில் எந்த உண்மையும் இல்லை. நான் இருக்கும் வீதியிலே அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள சிலரின் வீடுகளும் இருக்கின்றன எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.