புலிகளின் போராட்டத்துக்கு அரசியல் நோக்கம் இருந்தது! – ஞானசார தேரர்

விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்திருந்தால், நாட்டில் 30 வருடகால யுத்தம் நீடித்திருக்காது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

மேலும் விடுதலை புலிகளுக்கு அரசியல் நோக்கம் காணப்பட்டது. ஆனால் இஸ்லாமிய தீவிரவாதம் அவ்வாறானதொன்று அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை குறிப்பிட்டார்.

“தற்போது நாட்டில் தோன்றியுள்ள பிரச்சினைக்கு எம்மால் தீர்வு காண முடியும். ஆகையால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயற்பாட்டினை ஒழிப்பதற்கு மதத் தலைவர்களின் தலையீடுகளே அவசியமாகும். இதில் அரசியல்வாதிகள் தலையிடத் தேவையில்லை. நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார விடயங்களில் அரசியல்வாதிகள் அவதானம் செலுத்தினால் போதுமானதாகும்.

விடுதலை புலிகளின் போராட்டத்தில் அரசியல்வாதிகள் தமக்கான நலன்கள் பெற்றுகொள்வதனை கருத்திற்கொண்டு செயற்பட்டார்கள். மாறாக அவர்களின் போராட்டத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்திருந்தால் நாட்டில் 30 வருடகால யுத்தம் நீடித்திருக்காது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள். புலிகளுக்கு அரசியல் நோக்கம் காணப்பட்டது. ஆனால் தொடர் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு நோக்கம் என்று ஒன்றில்லை.

ஆனால் தற்போதுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள், தாக்குதலின் ஊடாக அரசியல் இலாபம் பெற முனைவது கவலையளிக்கின்றது. மேலும் சஹரான் போன்ற பயங்கரவாதிகள் உருவாவதற்கு பின்னணியை ஏற்படுத்தி கொடுத்த முஸ்லிம் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கின்றார்கள்” எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!