இனி கையெழுத்திட வேண்டியதில்லை – ரவிகரன், சிவாஜிக்கு உத்தரவு!

வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டதுடன், இனி மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றத்துக்குச் சென்று கையெழுத்திடத் தேவையில்லை என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரச சொத்துகளைச் சேதம் விளைவித்தக் குற்றச்சாட்டில், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரனை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார், அவருக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணைகளையடுத்து து.ரவிகன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணைகோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் வெளிவந்தார். இருவரும், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றத்துக்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று இடம் பெற்ற விசாரணைகளில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!