முதுமைக்கால ஞாபகமறதி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முதலாவது கிராமம் விரைவில் திறந்துவைப்பு!

முதுமைக்கால நோய்களால் பாதிக்கப்பட்ட வயோதிபர்கள் மட்டும் வசிப்பதற்கான கனடாவின் முதலாவது கிராமம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. அல்ஸ்மயர், டிமென்டியா எனப்படும் ஞாபகமறதி, மாறாட்டம் உள்ளிட்ட முதுமைக்கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, குறித்த கிராமம் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் மெட்ரோ வன்கூவர் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த கிராமம், எதிர்வரும் ஜூலை மாதமளவில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கிராமத்தில் மாடிகள் அற்ற கட்டிடங்கள், விடுகள், கடைத்தொகுதிகள், சமூக மையம் என பல்வேறு வசதிகளும் உள்ளன.

சுற்றிவரப் பாதுகாக்கப்பட்டுள்ள அந்தக் கிராமத்திலிருந்து வெளியேறுவதற்கு ஒரு வழி மட்டுமே இருக்கும். இவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதனால், ஞாபகமறதி உள்ளவர்கள் தவறுதலாக வெளியே சென்று, திரும்பி வருவதற்கு தெரியாமல், காணாமல் போகும் சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது. அத்துடன் அங்கே தங்குவோருக்கு குழப்பம் ஏற்படாத வகையில், படிகள், மின் தூக்கிகள், மின் படிகள், மாடிகள் என்பன அற்ற வகையில் குறித்த இந்த கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தங்குவதற்காக ஏற்கனவே 50 இலிருந்து 55 பேர் வரையில் முன்பதிவு செய்து கொண்டுள்ள நிலையில், மொத்தம் 72 பேருடன் பதிவினை நிறுத்திக் கொள்ளவுள்ளதாக இந்தக் கிராமத்தினை அமைத்து வருவோர் தெரிவித்துள்ளனர். உலகிலேயே இந்த மாதிரியான கிராமம் ஒன்று நெதர்லாந்தில் முதன்முறையாக திறக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முன்மாதியாக கொண்டே, கனடாவில் இவ்வாறான முதலாவது கிராமம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!