போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ளத் தயார்- சிறிலங்கா இராணுவத் தளபதி

போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா இராணுவம் தயாராக இருப்பதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை நேற்றுமுன்தினம் சந்தித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்கா இராணுவம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவதற்காக, போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயார்.

சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. அதனால் போர்க்குற்ற விசாரணைகளுக்கு அஞ்ச வேண்டியதில்லை.

போர்க்குற்றச்சாட்டுகளை சாட்சியங்களுடன முறியடிப்பதற்காக, சிறிலங்கா இராணுவம், புதிய பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் இதற்காகவே உருவாக்கப்பட்டது.

சிறிலங்காவுக்கு வெளியே இராணுவத்துக்கு தேவையான ஆதரவு இல்லாததால், இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு கட்டமைப்பு ஒன்று அவசியம்.

சிறிலங்கா இராணுவத்தில் உள்ள சிலர் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்த இராணுவத்தின் மீதும் குற்றம்சாட்ட முடியாது.

தவறுகளைச் செய்த சிறிலங்கா இராணுவத்தினர் 14 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக ஆட்கடத்தல் உள்ளிட்ட போர்க்குற்றச்சாட்டுகளை பெரும்பாலும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் குழு ஒன்றே முன்வைக்கிறது.

போரின் போது காணாமல் போனவர்களின் நிலையை விரிவான விசாரணை ஒன்றின் மூலமே உறுதி செய்து கொள்ள முடியும். அண்மையில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான பணியகம், உண்மையக் கண்டறிந்து, காணாமல் போனவர்களின் நிலையை அறிய உதவக் கூடும்.

மாலி, லெபனான், கொங்கோ, சூடான், ஆகிய நாடுகளில் சிறிலங்கா படையினர் 500 பேர் ஐ.நா அமைதிப்படைக்காக பணியாற்றி வருகின்றனர்.

மேலும், நன்கு பயிற்சி பெற்ற 3500 படையினரை ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்ப தயாராக இருக்கிறோம்.

போரின்போது, சிறிலங்கா இராணுவம் 236,000 பேரைக் கொண்டதாக இருந்தது. போர் முடிந்த பின்னர், இராணுவத்தின் ஆளணி 25 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

போர் டாங்குகள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட சில போர்க்கருவிகளும் கைவிடப்படவுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!